உத்தவ் தாக்கரே பற்றி சர்ச்சை பேச்சு: அம்ருதா பட்னாவிசுக்கு சிவசேனா நிர்வாகி கடும் எதிர்ப்பு - டுவிட்டரில் வார்த்தை போரால் பரபரப்பு


உத்தவ் தாக்கரே பற்றி சர்ச்சை பேச்சு: அம்ருதா பட்னாவிசுக்கு சிவசேனா நிர்வாகி கடும் எதிர்ப்பு - டுவிட்டரில் வார்த்தை போரால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Dec 2019 10:45 PM GMT (Updated: 23 Dec 2019 7:50 PM GMT)

உத்தவ் தாக்கரே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அம்ருதா பட்னாவிசுக்கு சிவசேனா பெண் நிர்வாகி பிரியங்கா சதுர்வேதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் இடையேயான டுவிட்டர் வார்த்தை போர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற சிவசேனா அரசு மும்பை ஆரே காலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க மரங்களை வெட்ட தடை விதித்தது. இந்தநிலையில் அவுரங்காபாத்தில் பால்தாக்கரே நினைவிடம் கட்ட 1,000 மரங்கள் வெட்டப்பட உள்ளதாக செய்திகள் பரவின.

இதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா, சிவசேனாவை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அதில் அவர், வெளிவேஷம் போடுவது ஒரு வகை நோய். கமிஷன் பணத்திற்காகவோ அல்லது உங்கள் வசதிக்காகவோ மரங்களை வெட்ட அனுமதிப்பது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என கூறியிருந்தார்.

அம்ருதாவின் இந்த குற்றச்சாட்டுக்கு சிவசேனா மூத்த பெண் தலைவர் பிரியங்கா சதுா்வேதி டுவிட்டரில் பதிலடி கொடுத்தார்.

அதில், ‘‘உங்களை ஏமாற்றம் அடைய செய்ததற்காக வருந்துகிறேன். உண்மையில், நினைவிடத்திற்காக ஒரு மரம் கூட வெட்டப்படப்போவதில்லை. மேயரும் இதை உறுதிப்படுத்தி உள்ளார். கட்டுக்கடங்காத பொய்களை கூறுவதும் ஒருவகை பெரிய நோய் தான். விரைவில் நலம்பெற வேண்டுகிறேன்’’ என கூறினார்.

இந்தநிலையில் மீண்டும் இவர்களுக்குள் வார்த்தை போர் வெடித்துள்ளது.

சமீபத்தில் ‘ரேப் இன் இந்தியா’ என்று கூறியதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கோர பா.ஜனதாவினர் வலியுறுத்தினர். அவ்வாறு மன்னிப்பு கோர எனது பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி என்று கூறி அவர் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

வீர சாவர்க்கரை அவதூறாக பேசியதற்காக ராகுல்காந்திக்கு பாரதீய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதேபோல முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்துத்வா சிந்தனையாளரான வீரசாவர்க்கரை கண்டிப்பாக ராகுல் காந்தியால் ஒருபோதும் நெருங்க முடியாது. அவரின் ஒரு செயலையும் அவரால் ஈடு செய்ய முடியாது” என கூறியிருந்தார்.

இதற்கு ஆதரவு தெரிவித்து அம்ருதா பட்னாவிஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த பதிவில், “நீங்கள் சொன்னது உண்மை தான் பட்னாவிஸ் அவர்களே. ஒருவர் தனது பெயருக்கு பின்னால் தாக்கரே என்ற குடும்ப பெயரை வைத்திருந்தால் மட்டும் பால் தாக்கரே ஆகிவிட முடியாது. அதற்கு ஒருவர் கொள்கை ரீதியாக உண்மையாக இருக்கவேண்டும். மக்கள் முன்னேற்றம் குறித்து சிந்திக்கவேண்டும். கட்சி உறுப்பினர்களை குடும்பத்திற்கு மேலாக கருதவேண்டும்” என கூறினார்.

இதற்கும் சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி கடும் எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த பதிவில் “ஆமாம், அவர் (உத்தவ் தாக்கரே) குடும்ப பெயருக்கு ஏற்ப வாழ்கிறார். ஆனால் நீங்கள் வழக்கம்போல செய்திகளை தவறவிட்டு விட்டீர்கள். இந்த அரசில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொள்கை ரீதியான அர்ப்பணிப்புடன் மக்களின் நலனுக்கான வேலைகள் நடக்கின்றன. விவசாயகடன் தள்ளுபடி, ஏழைகளுக்கு ரூ.10-க்கு உணவு திட்டம், மண்டலங்கள் தோறும் முதல்-மந்திரி அலுவலகம் ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளன.

இவை அனைத்தும் ஒரு மாதத்தில் செய்யப்பட்டு உள்ளன. அதிர்ஷ்டவசமாக சொந்த புகழை பாடிக்கொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.

அம்ருதா பட்னாவிஸ், பிரியங்கா சதுர்வேதி இடையே மீண்டும் வெடித்த வார்த்தை போர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story