மோட்டார்சைக்கிள் மீது ஜீப் மோதல்: பனியன் நிறுவன தொழிலாளி பலி


மோட்டார்சைக்கிள் மீது ஜீப் மோதல்: பனியன் நிறுவன தொழிலாளி பலி
x
தினத்தந்தி 2 Jan 2020 9:45 PM GMT (Updated: 2 Jan 2020 1:30 PM GMT)

சாணார்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது ஜீப் மோதி பனியன் நிறுவன தொழிலாளி பலியானார். 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

கோபால்பட்டி, 

நத்தம் அருகேயுள்ள சாத்தாம்பாடியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 39). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் நேற்று முன்தினம் இரவு 10.40 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்று விட்டு சாத்தாம்பாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வழியில் திண்டுக்கல்–நத்தம் சாலையில் கணவாய்பட்டி கருப்புசாமி கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த ஜீப், மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் சீனிவாசன் படுகாயமடைந்து சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து கால் முறிந்து உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தனர்.

ஆனால் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்ததாக கூறப்படுகிறது. அதில் வந்த பணியாளர்கள் சீனிவாசனை பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சாணார்பட்டி போலீசார் விரைந்து வந்து சீனிவாசன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சீனிவாசனுக்கு கால் முறிந்து அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதே அவரது இறப்புக்கு காரணம் என்றும், ஆம்புலன்ஸ் சீக்கிரம் வந்திருந்தால் ரத்தப்போக்கை நிறுத்தி அவரை காப்பாற்றி இருக்கலாம் என்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர். இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சீனிவாசனுக்கு திருமணமாகி ஜெயபாலா(29) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

Next Story