இறந்ததாக கூறப்பட்டவர்: சவுதி அரேபியாவில் உயிருடன் இருக்கும் மகளை மீட்டுத்தர வேண்டும் பெற்றோர் வலியுறுத்தல்


இறந்ததாக கூறப்பட்டவர்: சவுதி அரேபியாவில் உயிருடன் இருக்கும் மகளை மீட்டுத்தர வேண்டும் பெற்றோர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Jan 2020 11:00 PM GMT (Updated: 4 Jan 2020 6:50 PM GMT)

இறந்ததாக கூறப்பட்டவர் தற்போது சவுதி அரேபியாவில் உயிருடன் இருக்கிறார். அவரை மீட்டுத்தர வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்,

எங்களுடைய மகள் இமாகுலேட்(வயது34) பி.சி.ஏ. பட்டதாரி. இவரை கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி அய்யம்்பேட்டையில் உள்ள ஒரு ஏஜெண்டு மூலம் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்காக சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தோம்.

இறந்ததாக தகவல்

ஆனால் அவர் அங்கு வீட்டு வேலைக்கு பணியமர்த்தப்பட்டார். இந்த நிலையில் 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ந் தேதி இமாகுலேட் எங்களிடம் பேசினார். அப்போது அவர் தனக்கு வழங்கப்பட்ட வீட்டு வேலை மிகவும் கடினமாக இருப்பதாகவும், சரியான சாப்பாடு வழங்கப்படவில்லை எனவும், மிகக்கடுமையாக வேலை வாங்குவதாகவும் கூறினார்.

மேலும் தன்னை ஏஜெண்டிடம் சொல்லி திரும்ப அழைக்க ஏற்பாடு செய்யுமாறும் கூறினார். அதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம். ஆனால் அந்த மாதம் 10-ந் தேதி இமாகுலேட் தூக்குப்போட்டு இறந்து விட்டதாக எங்களிடம் கூறினர்.

உடல் அடக்கம்

இதையடுத்து எங்களது மகள் உடலை மீட்டுத்தருமாறு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு கொடுத்தோம். ஆனால் அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடுத்தோம்.கோர்ட்டு உத்தரவுக்குப் பிறகு சவுதி அரேபியாவில் உள்ள தமாம் நகரில் இருந்து திருச்சிக்கு 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி உடல் வந்தது. அதை பார்த்தபோது அது எங்களது மகள் அல்ல என்பது தெரிய வந்தது. நாங்கள் ஆட்சேபணை தெரிவித்ததால், அந்த உடல் திருச்சி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டதன் பேரில் டி.என்.ஏ. சோதனை, மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த அறிக்கையின் பேரில் அந்த உடல் எங்கள் மகளுடையதுதான் என்றும், நாங்கள் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ேகார்ட்டு அறிவுறுத்தியது. எனவே வேறு வழியின்றி அந்த உடலை பெற்றுக்கொண்டு அடக்கம் செய்து விட்டோம்.

உயிருடன் உள்ளார்

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சமூக வலைதளத்தில் வந்த வீடியோவில் 23 பேர் சவுதி அரேபியாவில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்படுவதாகவும், ஊதியம் இல்லாமலும், போதிய சாப்பாடு இல்லாமலும் ஆண்டுக்கணக்கில் அடைப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் உள்ள குழுவில் எங்கள் மகள் உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றோம்.இதுகுறித்து புதுடெல்லிக்கு சென்று பிரதமர், உள்துறை மந்திரி, வெளியுறவுத்துறை மந்திரி, சட்டத்துறை மந்திரி உள்ளிட்ட அலுவலகங்களில் எங்கள் மகளையும், அடைபட்டு சித்ரவதைக்கு உள்ளாகியிருக்கும் மற்றவர்களையும் மீட்க வேண்டும் என மனு கொடுத்தோம். இதுதொடர்பாக அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story