பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் கரும்பு விற்பனை தொடங்கியது


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் கரும்பு விற்பனை தொடங்கியது
x
தினத்தந்தி 4 Jan 2020 10:30 PM GMT (Updated: 4 Jan 2020 7:59 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் வாரச்சந்தையில் கரும்பு விற்பனை தொடங்கி உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல்லில் உள்ள திருச்செங்கோடு சாலையில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் கூடுவது வழக்கம். இங்கு காய்கறிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் நாமக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ளதால் நாமக்கல் வாரச்சந்தையில் கரும்பு விற்பனைக்கு வர தொடங்கி உள்ளது. பள்ளிபாளையம் மற்றும் சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து நாமக்கல் சந்தைக்கு கரும்புகளை கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

விளைச்சல் குறைவு

கரும்பை வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாங்கி சுவைப்பதை காண முடிந்தது. கரும்பு விலை தரத்தை பொறுத்து ஜோடி ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் கரும்பு விளைச்சல் குறைவாக இருப்பதாகவும், இருப்பினும் அவற்றின் விலை உயரவில்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே பொங்கல் பண்டிகை நெருங்கும் சமயத்தில் கரும்பின் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.


Next Story