திருச்சியில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம்


திருச்சியில் மண்டை ஓடுகளுடன் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 5 Jan 2020 8:43 PM GMT)

கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிகாரிகள் அனுமதி பெற்று தரும்வரை போராட்டம் தொடரும் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

திருச்சி,

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில நாட்களுக்கு முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 7 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.அன்றைய தினம் உதவி கலெக்டர் (பொறுப்பு) அன்பழகன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதுதொடர்பாக கடந்த 3-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி பெற்று தருவதாகவும் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகளிடம் கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்து இருந்தார். ஆனால் முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி பெற்று தராததால் விவசாயிகள் நேற்று முன்தினம் முதல் திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோரவுண்டனா அருகே மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து நேற்று 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மண்டை ஓடுகளுடன், பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டை ஓடுகளையும், எலும்புகளையும் வரிசையாக தரையில் வைத்தும், கையில் மண் சட்டியை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிகாரிகள் அனுமதி பெற்று தரும்வரை போராட்டம் தொடரும் என அய்யாக்கண்ணு தெரிவித்தார்.


Next Story