தமிழ்நாட்டில் புதிதாக 10 ஜவகர் சிறுவர் மன்றங்கள் கலைப்போட்டிகள் பரிசளிப்பு விழாவில் அமைச்சர் தகவல்


தமிழ்நாட்டில் புதிதாக 10 ஜவகர் சிறுவர் மன்றங்கள் கலைப்போட்டிகள் பரிசளிப்பு விழாவில் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2020 10:45 PM GMT (Updated: 5 Jan 2020 8:47 PM GMT)

தமிழ்நாட்டில் நடப்பாண்டு புதிதாக 10 ஜவகர் சிறுவர் மன்றங்கள் உருவாக்கப்படும் என்று மாநில கலைப்போட்டிகள் பரிசளிப்பு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

திருச்சி,

கலை பண்பாட்டு துறையின், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக நடத்தப்பட்ட மாநில அளவிலான கலைப்போட்டிகள் பரிசளிப்பு விழா மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு விலையில்லா இசைக்கருவிகள் வழங்கும் விழா நேற்று இரவு திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரியில் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கி பேசினார். கலை பண்பாட்டுத்துறை இணை இயக்குனர் சூரியபிரகா‌‌ஷ் வரவேற்று பேசினார். சென்னை கலைப்பண்பாட்டு துறை இயக்குனர் கலை அரசி முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்று பரதநாட்டியம், வாய்ப்பாட்டு மற்றும் நாட்டுப்புற கலைகளில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ், நாட்டுப்புற கலைஞர்களுக்கு விலையில்லா இசைக்கருவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இயற்கை தந்த வரம்

கலை என்பது இயற்கை நமக்கு தந்த வரம். தமிழ் இசை என்பது பண்பாக, பாட்டாக, அந்த பண்பில் இருந்து பல வி‌‌ஷயங்கள் வெளிவந்துள்ளது. கர்நாடக சங்கீதமே தமிழில் இருந்து வந்ததுதான் என ஒரு ஆய்வு சொல்லி இருக்கிறது. உலகத்திற்கே கலையை எடுத்து சொன்ன இடம் நமது தமிழகம். குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் கலை வாழ்ந்திருக்கிறது.

கண்ணால் பேசுவது, உடல் மொழியால் பேசுவது எல்லாம் கலையால் மட்டுமேதான் முடியும். கண் அசைவில் ஒரு கருத்தை சொல்வது நிர்வாக ரீதியாக மிக மிக முக்கியமான வலிமையாக காட்டப்படுகிறது.

புதிதாக 10 சிறுவர் மன்றங்கள்

சின்ன குழந்தைகளை கலைகளை கற்க சேர்ப்பதற்காக இதுவரை 40 ஜவகர் சிறுவர் மன்றங்கள் உருவாக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இன்னும் புதிதாக 10 ஜவகர் சிறுவர் மன்றங்கள் உருவாக்கப்படும். அதுவும் ஊரக பகுதிகளில் தொடங்கப்படும். குறிப்பாக கிராமப்புற சிறுவர்கள் பயன்பெறும் வகையில் 2 கிராமங்களில் ஜவகர் சிறுவர் மன்றங்களை கொண்டு செல்கிறோம்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து இளைஞர்களுக்கு, சிறுவர்களுக்கு கலைகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உருவாக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக புதிதாக ஒரு ஜவகர் சிறுவர் மன்றமும் உருவாக்கப்பட்டதில்லை. 10 ஆண்டுகளுக்கு பின், ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் நடப்பாண்டு 10 ஜவகர் சிறுவர் மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன.

ஜெயலலிதா பல்கலைக்கழகம்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாட்டில் இசை, நடனத்துக்கான ஒரு கலை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்று கனவு கண்டார். அவரது பெயரில், அதாவது ‘டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் முறையாக பட்டமளிப்பு விழா நடத்த போகிறோம். எல்லோருக்கும் டிகிரி சான்றிதழ் வழங்கப்படும். அதற்கான சட்டரீதியான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு விட்டன. அதற்காக, 27 கல்லூரிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இசைக்கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

7 மண்டலங்களாக கலை பண்பாட்டு துறையை பிரித்திருக்கிறோம். இதேபோல் தமிழ் பண்பாட்டு மையம் உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளையும் ஒருங்கிணைக்கும் பணியும் நடக்க இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் திருச்சி கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர்(பொறுப்பு) ஹேமநாதன் நன்றி கூறினார்.

Next Story