குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 11 Jan 2020 7:54 PM GMT)

கரூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) குடியரசு தினவிழாவை கொண்டாடுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தாந்தோணியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் குடியரசுதின விழாவை கொண்டாடும் வகையில் விளையாட்டு மைதானத்தை நல்ல முறையில் பராமரித்து சீர்செய்து வழங்கும் பணியை நகராட்சித்துறையினர் மேற்கொள்ள வேண்டும். மைதானத்தில் தீத்தடுப்பு வாகனம் மற்றும் சுகாதாரத்துறையின் அவ சர ஊர்தியை பாதுகாப்பு கருதி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வருகைதரும் சுதந்திர போராட்ட தியாகிகளை நல்ல முறையில் உபசரித்து அமரவைக்க வேண்டும். அனைத்து அரசுத்துறைகளும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக பயனாளிகளை தேர்வு செய்தல், நல்லமுறையில் பணியாற்ற அலுவலர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்குவதற்கான பெயர் பட்டியலை உரிய காலத்திற்குள் தயார் செய்து மாவட்ட சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

காவல்துறை, தேசிய மாணவர்படை, ஜுனியர் ரெட்கிராஸ், நாட்டுநலத்திட்ட மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை சம்பந்தப்பட்ட துறையினர் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்த வேண்டும். கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் குறித்த தகவல்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழங்க வேண்டும். முக்கிய பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சாமியானா பந்தல் அமைத்தல், விளையாட்டு மைதானத்தில் குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வசுரபி, சார் ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் (குளித்தலை), வருவாய் கோட்டாட்சியர் சந்தியா(கரூர்), சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியம், கலால் உதவி ஆணையர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி லீலாவதி மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறை யினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story