கும்மிடிப்பூண்டி பஜாரில் தொழிலாளியை கத்தியால் குத்திய கும்பல் - தடுக்க முயன்ற போலீஸ்காரருக்கும் கத்திக்குத்து விழுந்தது


கும்மிடிப்பூண்டி பஜாரில் தொழிலாளியை கத்தியால் குத்திய கும்பல் - தடுக்க முயன்ற போலீஸ்காரருக்கும் கத்திக்குத்து விழுந்தது
x
தினத்தந்தி 13 Jan 2020 4:15 AM IST (Updated: 12 Jan 2020 11:17 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி பஜாரில் பட்ட பகலில் முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தியது. இதனை தடுக்க முயன்ற போலீஸ்காரர் ஒருவரையும் கத்தியால் குத்திய அந்த கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). கூலித்தொழிலாளி. இவர் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள பூக்கடை ஒன்றில் மாலை கட்டும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 8-ந்தேதி ராஜேசுக்கும் கும்மிடிப்பூண்டியை் சேர்ந்த குற்றவாளியான முனுசாமி (34) மற்றும் அவரது நண்பர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் வாக்குவாதம் முற்றி முன்விரோதமாக மாறியது.

இதனையடுத்து முனுசாமி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராஜேஷ், கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று கும்மிடிப்பூண்டி பஜாரில் முனுசாமி மற்றும் அவரது நண்பர்கள் என 4 பேர் சேர்ந்து கொண்டு ராஜேசை வழிமறித்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீஸ்காரர் ரஞ்சித் (26) என்பவர் இந்த சம்பவத்தை தடுக்க முயன்றார். அவரையும் கத்தியால் குத்திய அந்த கும்பலை பொதுமக்கள் அங்கு திரண்டதால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் காயம் அடைந்த இருவரும் கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் பட்டபகலில் ஆள்நடமாட்டம் நிறைந்த நேரத்தில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முனுசாமி உள்பட 4 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Next Story