கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழுகும் அபாயம் விவசாயிகள் கவலை


கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் அழுகும் அபாயம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 Jan 2020 4:30 AM IST (Updated: 20 Jan 2020 1:40 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் பெரும்பாலான விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, அதங்குடி, வடபாதிமங்கலம், சோலாட்சி, கிளியனூர், உச்சுவாடி, மன்னஞ்சி, மாயனூர், புனவாசல், பழையனூர், நாகங்குடி, வேளுக்குடி, சித்தனங்குடி, வக்ராநல்லூர், தண்ணீர்குன்னம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியது.

பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மழை நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

அழுகும் அபாயம்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒரு போக சாகுபடியாக சம்பா பயிர் நடவு பணிகளை மேற்கொண்டோம். நெற்பயிர்கள் வளரும் பட்சத்தில் ஆணைக்கொம்பன் நோய் தாக்குதல் ஏற்பட்டு குருத்து பகுதிகள் பாதிக்கப்பட்டதால் போதிய அளவு நெற்பயிர்கள் துளிர்விடாமல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்ற போதிலும் மருந்து தெளித்து அதனை ஓரளவு சரி செய்தோம். அதன் பிறகு கதிர்கள் முற்றிய நிலையில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் திடீரென பெய்த பலத்த மழையால் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியும், அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தும் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. இதனால் மகசூல் குறைவாக இருக்கும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story