குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 2 Feb 2020 11:00 PM GMT (Updated: 2 Feb 2020 2:42 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி பெரம்பலூரில், தி.மு.க.வினர் தங்களது தோழமை கட்சிகளுடன் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

பெரம்பலூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தோழமை கட்சிகளுடன் இணைந்து நடத்திய கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நேற்று முதல் வருகிற 8-ந் தேதி வரை நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் இணைந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. நேற்று காலை பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடந்த கையெழுத்து இயக்கத்தை இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

வருகிற 8-ந் தேதி வரை...

பின்னர் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சி நிர்வாகிகள் கையெழுத்திட்டனர். இதில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன், தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், நகர செயலாளர் பிரபாகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் அன்பழகன், ம.தி.மு.க. கட்சியின் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ரோவர் வரதராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, இந்திய தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கடை வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் கையெழுத்து முகாம்கள் அமைக்கப்பட்டு, கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. வருகிற 8-ந் தேதி வரை மொத்தம் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு அவை அனைத்தும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Next Story