சத்திரம் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் 11 மாதங்களில் நிறைவடையும் கலெக்டர் சிவராசு தகவல்


சத்திரம் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் 11 மாதங்களில் நிறைவடையும் கலெக்டர் சிவராசு தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2020 11:00 PM GMT (Updated: 4 Feb 2020 8:38 PM GMT)

திருச்சி சத்திரம் பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் இன்னும் 11 மாதங்களில் நிறைவடையும் என்று கட்டுமான பணிகள் ஆய்வுக்கு பின் கலெக்டர் சிவராசு கூறினார்.

திருச்சி,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் ரூ.17 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. ராட்சத எந்திரங்கள் உதவியுடன் பள்ளம் தோண்டப்பட்டு கீழ் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சத்திரம் பஸ் நிலையத்தை நவீன வசதிகளுடன் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 15 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன. கீழ்தளம் (பேஸ்மட்)370 சதுர மீட்டரில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 248 தூண்களில் இதுவரை 218 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. தரைத்தளம் 3,864 சதுர மீட்டர், முதல் தளம் 687 சதுர மீட்டர் என மொத்தம் 4,921 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

11 மாதங்களில்...

இந்த கட்டுமான பணிகள் அனைத்தும் இன்னும் 11 மாதங்களில் நிறைவடையும். அதன் பின்னர் இந்த பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 30 பஸ்களை நிறுத்துவதற்கான இடவசதி கிடைக்கும். தரைத்தளத்தில் 11 கடைகள், முதல் தளத்தில் 22 கடைகள் என மொத்தம் 33 கடைகள் ஒதுக்கப்படும். இது தவிர பயணிகள் ஓய்வறை, பயணிகள் நடைபாதை, பயண சீட்டுவிற்குமிடம், பொருட்கள் வைக்கும் அறை, நவீன கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, உணவகம் ஆகியவையும் அமைக்கப்படும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பொறுத்தவரை திருச்சி நகரில் 26 பணிகளுக்காக ரூ.922 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 பணிகள் முடிந்து விட்டன. மற்ற பணிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், ஒப்பந்த புள்ளி கோருதல் போன்ற நிலையில் உள்ளன. தில்லைநகர் வணிக வளாகம் கட்டுமான பணி சுமார் 60 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

அரை வட்ட சுற்றுச்சாலை

திருச்சி அரை வட்ட சுற்றுச்சாலையை பொறுத்தவரை இம்மாதம் இறுதிக்குள் மாத்தூர் சந்திப்பில் இருந்து தஞ்சாவூர் சாலையை இணைக்கும் பணிகள் முடிவடையும். அடுத்த 4 மாதங்களில் பஞ்சப்பூரில் இருந்து மாத்தூர் சந்திப்பு வரை சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு இன்னும் ரெயில்வே இலாகா அனுமதி வழங்கவில்லை. ஒரு மாத காலத்தில் அதற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதி கிடைத்ததும் 6 மாத காலத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்படும்.

பஞ்சப்பூரில் இருந்து கரூர் சாலையில் திண்டுக்கரை வரையிலான பணிகளை பொறுத்தவரை 6 கி.மீ. தூரத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்ததும் சாலை அமைக்கும் பணி தொடங்கி 18 மாத காலத்தில் முடிக்கப்படும்.

தனியார் மார்க்கெட்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து கள்ளிக்குடி மார்க்கெட்டிற்கு கடைகளை மாற்ற முடியாது என வியாபாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே புதிதாக கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட்டை வேளாண்மை துறை தொடர்பான பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படலாமா? என யோசனை கேட்கப்பட்டு உள்ளது. வியாபாரிகள் தனியாக ஒரு மார்க்கெட் அமைப்பதற்கு அனுமதி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், நகர பொறியாளர் அமுதவல்லி, ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story