காட்பாடியில், 2 ஷோரூம்களை உடைத்து பணம், செல்போன்கள் திருட்டு - கண்காணிப்பு கேமராவை வேறுபகுதிக்கு திருப்பிவிட்டு மர்மநபர் கைவரிசை


காட்பாடியில், 2 ஷோரூம்களை உடைத்து பணம், செல்போன்கள் திருட்டு - கண்காணிப்பு கேமராவை வேறுபகுதிக்கு திருப்பிவிட்டு மர்மநபர் கைவரிசை
x
தினத்தந்தி 9 Feb 2020 11:15 PM GMT (Updated: 9 Feb 2020 7:35 PM GMT)

காட்பாடியில் 2 ஷோரூம்களை உடைத்து பணம், செல்போன்களை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காட்பாடி,

காட்பாடியில் சித்தூர் ரோட்டில் தமிழகம் முழுவதும் இயங்கும் வீட்டு உபயோகப்பொருள் விற்பனை செய்யும் ஷோரூமின் கிளை உள்ளது. 4 மாடிகள் கொண்ட இந்த ஷோரூமில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் பக்கவாட்டில் உள்ள இரும்புக் குழாய் வழியாக ஏறி 4-வது மாடிக்கு சென்று அங்கிருந்த கதவின் தகட்டை உடைத்து நுழைந்துள்ளான்.

பின்னர் ஷட்டரின் பூட்டை உடைத்து ஷோரூம் உள்ளே சென்ற அவன் பணப்பெட்டியில் இருந்த ரூ.40 ஆயிரம், 3 செல்போன்கள் ஆகி்யவற்றை திருடிக்கொண்டு வந்த வழியாகவே வெளியே சென்றுள்ளான்.

இதேபோன்று அருகில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூமுக்குள் நுழைந்துள்ளான். அங்கு பணப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.3,500-ஐ எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டான்.

நேற்று காலை வீட்டு உபயோக பொருட்கள் ஷோரூமை திறந்த ஊழியர்கள் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். ஷோ ரூமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். சில கண்காணிப்பு கேமராக்கள் ேமல்நோக்கி திருப்பிவிடப்பட்டிருந்தன.

தனது உருவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகாமல் இருப்பதற்காக மர்மநபர் அவ்வாறு செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

எனினும் ஒரு கேமராவில் அந்த நபர் முகமூடி மற்றும் கையுறை அணிந்து பணத்தையும், செல்போனையும் திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனையடுத்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு ஷோரூமில் பதிவாகி இருந்த மர்ம நபரின் கைரேகைகளை பதிவு செய்தார்.

பல நாட்கள் நோட்டமிட்டு மர்ம நபர் இந்த திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இந்த சம்பவங்கள் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் செல்போன்களை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்த ஷோரூம்களில் திருட்டு நடந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story