திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கணவர் கைது


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கணவர் கைது
x
தினத்தந்தி 11 Feb 2020 4:45 AM IST (Updated: 10 Feb 2020 11:21 PM IST)
t-max-icont-min-icon

தாத்தா சொத்தை கொடுக்க தந்தை மறுப்பதாக கூறி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற போலீஸ் ஏட்டுவின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு மனு கொடுக்க வருபவர்களை கடும் சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை 10.20 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் மீது தாடியுடன் ஒருவர் ஏறி உள்ளே குதித்தார். அவரது கையில் மண்எண்ணெய் கேன் இருந்தது.

தீக்குளிக்க முயற்சி

கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் எழுதும் இடத்திற்கு சென்ற அவர், திடீரென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலறவே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரிசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் பாய்ந்து சென்று அவரை தடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நபர் பையுடன் கொண்டு வந்திருந்த புகார் மனு மற்றும் தீப்பெட்டி ஆகியவற்றை பறித்துவிட்டு, அவர் மீது தண்ணீர் ஊற்றி குளிக்க செய்து காப்பாற்றினர். போலீசார் ஏன்? இந்த முடிவு எடுத்தீர்கள்? என்று கேட்டபோது தந்தை 2-ம் திருமணம் செய்து கொண்டு சொத்தை பிரித்து கொடுக்காமல் தன்மீது போலீசில் பொய்புகாரும் கொடுத்ததாக கூறினார்.

எனவே, தந்தையிடம் இருந்து தாத்தா சொத்தை முறைப்படி பேரனுக்கு தரவேண்டும் என்ற அடிப்படையில் முறையிட வந்ததாக கூறினார்.

போலீஸ் ஏட்டுவின் கணவர்

தீக்குளிக்க முயன்றவர் பெயர் கே.மணிகண்டன்(வயது 35). திருச்சி மாவட்டம் துவாக்குடிமலை (தெற்கு) அண்ணாநகரை சேர்ந்தவர் ஆவார். இவர், சேலத்தில் மத்திய அரசின் நிறுவனமான உருக்காலையில் ஒப்பந்தபணியில் டெக்னீசியனாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சேலம் ஆயுதப்படை போலீசில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இத்தம்பதிக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

கலெக்டரிடம் மணிகண்டன் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தாத்தா சொத்து

என் தந்தை காமராஜ். தாயார் ராணி. நான் சிறுவயதாக இருக்கும்போதே சிறிய மனவருத்தம் காரணமாக என்னையும், தாயாரையும் விட்டு பிரிந்து தந்தை சென்று விட்டார். என்னை மிகவும் சிரமப்பட்டு வளர்த்தவர் தாயார். எனக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தை உள்ளனர். எனது தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகில் முருங்கப்பேட்டை கிராமத்தில் வசதியாக வாழ்ந்து வருகிறார். அவர் அனுபவித்து வரும் சொத்துகள் அனைத்தும் தாத்தாவுக்கு(அப்பாவின் அப்பா) சொந்தமானது. நானும் என் தாயாரும் நேரில் சென்று தந்தையிடம் சொத்தில் உரிமை கேட்டோம். ஆனால், எங்களை அவர் சந்திக்காமல் பதில் ஏதும் கூறவில்லை. அவரின் 2-வது மனைவி, அவரது உறவினர்கள் சேர்ந்து கொண்டு எங்களை மிரட்டினர். எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. என் மீது ஜீயபுரம் போலீசில் பொய்யான புகார் அளித்தனர்.

சொத்து தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தற்போது தாயார் உடல்நிலை மோசமாக உள்ளது. இதனால் மிகவும் க‌‌ஷ்டப்பட்டு வருகிறோம். எனவே, தாத்தா சொத்தை பேரனுக்கு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

கலெக்டர் உத்தரவின்பேரில் கைது

இது தொடர்பாக சேலத்தில் உள்ள அவரது மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரோ, என்னிடம் வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் இப்படி நடந்து கொண்டது தெரியாது என்றார்.

பின்னர், தீக்குளிக்க முயன்றது, சுற்றுச்சுவர் ஏறி குதித்து உள்ளே வந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து கைது செய்ய கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டார். அதன்பேரில், திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் மணிகண்டன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story