வாடிப்பட்டி பஸ் நிலையத்தில், அனாதையாக கிடந்த சூட்கேஸ் - போலீசார் அதிரடி சோதனை
வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அனாதையாக கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அண்ணா சிலையின் பின்புறம் உள்ள பயணிகள் நிழற் குடைக்குள் இருக்கைகளுக்கு அருகில் சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. அதில் என்ன உள்ளது என்று தெரியாததால் பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. மேலும் கடந்த 2 நாட்களாக அதே இடத்தில் அந்த சூட்கேஸ் இருப்பதாக அந்த பகுதியில் காலணி தைக்கும் தொழிலாளர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
தகவலறிந்த வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உமா மகேஸ்வரி, கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சூட்கேசை சோதனை செய்தனர். அந்த சூட்கேசை கவனமாக திறக்க முயன்றனர். பின்னர் வெடிகுண்டு சோதனை நிபுணர்களை வரவழைத்து அந்த சூட்கேசை திறக்கலாமா என்று ஆலோசனை செய்தனர். மேலும் மோப்பநாயை வரவழைத்து சோதனை செய்த பின்பு திறக்கலாமா என்று பல்வேறு கோணங்களில் ஆலோசித்தனர்.
நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் ஒரு வழியாக சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது அதில் துணிமணிகள் எதுவும் இல்லாமல் காலி பெட்டியாக இருந்தது. அதன் பிறகே அங்கு நிலவிய பரபரப்பு அடங்கியது.
இது சம்பந்தமாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், இந்த சூட்கேசை யாராவது திருடர்கள் பயணிகளிடமிருந்து திருடி வந்து அதில் பணம், நகை எதுவும் இல்லை என்று தெரிந்த பின்பு ஏமாற்றத்தில் அதிலிருந்த பொருட்களை வேறு எங்காவது கொட்டிவிட்டு காலிப்பெட்டியை இங்கு வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்று கூறினர்.
Related Tags :
Next Story