குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நெல்லையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நெல்லையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நெல்லை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலப்பாளையம், கடையநல்லூர் ஆகிய ஊர்களில் முஸ்லிம் அமைப்புகள், ஜமாத்துக்கள் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் நடத்திய பேரணியில் தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து நெல்லையில் கடந்த 2 நாட்களாக ஆர்ப்பாட்டமும், முற்றுகை போராட்டமும் நடந்தது.
இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்கள், குடியுரிமை சட்டத்தை திருப்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
மேலும், சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு பேரணியின்போது நடந்த தடியடிக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் மாணவர்கள் கூறினர். இதை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் வரை நடந்தது. இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் திடீர் போராட்டத்தால் கல்லூரிக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story