தேவர்சோலை அருகே, ஆட்டோவை தந்தத்தால் குத்தி தூக்கிய காட்டுயானையால் பரபரப்பு - வியாபாரி உள்பட 3 பேர் உயிர்தப்பினர்


தேவர்சோலை அருகே, ஆட்டோவை தந்தத்தால் குத்தி தூக்கிய காட்டுயானையால் பரபரப்பு - வியாபாரி உள்பட 3 பேர் உயிர்தப்பினர்
x
தினத்தந்தி 26 Feb 2020 4:45 AM IST (Updated: 25 Feb 2020 11:46 PM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை அருகே ஆட்டோவை தந்தத்தால் குத்தி தூக்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வியாபாரி உள்பட 3 பேர் உயிர்தப்பினர்.

கூடலூர்,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மணிநகர் பகுதியை சேர்ந்தவர் கனிக்குமார் (வயது 43). இவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். மேலும் தேவர்சோலை பஜாரிலும், குந்தலாடி பகுதியிலும் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு குந்தலாடியில் இருந்து தேவர்சோலைக்கு சரக்கு ஆட்டோவில் கனிக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது கனிக்குமாருடன் அவருடைய மனைவி கீதா (வயது 38), 3½ வயது பெண் குழந்தை ஆட்டோவில் அமர்ந்து இருந்தனர். சரக்கு ஆட்டோ சசக்ஸ் தனியார் எஸ்டேட் பகுதியில் வந்து கொண்டிருந்த போது காட்டு யானை ஒன்று ரோட்டின் நடுவே திடீரென வந்தது. மேலும் கண்இமைக்கும் நேரத்தில் அந்த யானை சரக்கு ஆட்டோவை தனது தந்தத்தால் குத்தி ஒருபக்கமாக தூக்கியது.

இதை பார்த்த கனிக்குமார், அவரது மனைவி கீதா ஆகியோர் ஆட்டோவுக்குள் இருந்தவாறு கண்ணாடி வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது காட்டு யானை ஆட்டோவை தந்தத்தால் தூக்கியதை கண்டு பதைபதைத்தனர். பயத்தில் சத்தம் போட்டால் காட்டு யானை ஆக்ரோ‌‌ஷமாக தாக்கி விடும் என அச்சம் அடைந்து அமைதியாகவே இருந்தனர்.

சிறிது நேரத்தில் அந்த காட்டு யானை சரக்கு ஆட்டோவை சாலையில் கவிழ்த்து விடாமல் பழைய நிலையில் வைத்தது. பின்னர் 2 நிமிடம் சரக்கு ஆட்டோவை பார்த்து கொண்டிருந்த காட்டு யானை பின்நோக்கி நகர்ந்தது. அதுவரை உயிரை கையில் பிடித்தவாறு கனிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர். பின்னர் யானை வந்த வழியாக திரும்பி வேகமாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதனால் மயிரிழையில் கனிக்குமார் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்.

இதையடுத்து அந்த வழியாக மற்றொரு கார் வந்தது. இதனால் சரக்கு ஆட்டோவை சாலையோரம் நிறுத்திய கனிக்குமார், அந்த காரை நிறுத்தி தனது மனைவி, குழந்தையை அழைத்து கொண்டு தேவர்சோலை வந்து சேர்ந்தார். இந்த நிலையில் நேற்று பகல் 11 மணிக்கு கனிக்குமார் சசக்ஸ் பகுதிக்கு சென்று சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த சரக்கு ஆட்டோவை தேவர்சோலைக்கு ஓட்டி வந்தார். அப்போது அதன் பக்கவாட்டில் காட்டு யானை தந்தத்தால் குத்தி தூக்கியதில் சேதம் அடைந்திருந்ததை கவனித்தார். இதுபற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

காட்டு யானை ஒன்று சரக்கு ஆட்டோவை தந்தத்தால் குத்தி தூக்கிய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story