கோலாகல விழா ஏற்பாடு: 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் ராமநாதபுரம், விருதுநகரில் மருத்துவ கல்லூரிகள் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்


கோலாகல விழா ஏற்பாடு: 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் ராமநாதபுரம், விருதுநகரில் மருத்துவ கல்லூரிகள் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
x
தினத்தந்தி 29 Feb 2020 10:32 PM GMT (Updated: 29 Feb 2020 10:32 PM GMT)

ராமநாதபுரம், விருதுநகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கோலாகல விழாக்களில் 2 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார்.

ராமநாதபுரம்,

தமிழக அரசு வலியுறுத்தியதன் பேரில் ராமநாதபுரம், விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

இந்த மருத்துவ கல்லூரிகளில் உடனடியாக வகுப்புகளை தொடங்குவதற்காக முதல் கட்டமாக மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

அந்தவகையில், ராமநாதபுரம், விருதுநகரில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

ராமநாதபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் 22 ஏக்கர் பரப்பளவில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதில் மருத்துவக்கல்லூரி கட்டிடம் ரூ.125.01 கோடியிலும், மருத்துவமனை கட்டிடம் ரூ.150.01 கோடியிலும், குடியிருப்பு கட்டிடம் ரூ.69.98 கோடியிலும் ஆக மொத்தம் ரூ.345 கோடியில் கட்டப்படுகின்றன.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் ராம நாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 21 ஆயிரம் பேருக்கு அரசின் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முடிவுற்ற பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்து பேசுகிறார்.

விழாவுக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமை தாங்குகிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசுகிறார். அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் மணிகண்டன் (ராமநாதபுரம்), சதன் பிரபாகர் (பரமக்குடி), கருணாஸ் (திருவாடானை), மலேசியாபாண்டியன் (முதுகுளத்தூர்), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஏ.முனியசாமி, ராம்கோ கூட்டுறவு தலைவர் செ.முருகேசன் மற்றும் உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். முடிவில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நன்றி கூறுகிறார்.

முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்காக பிரமாண்ட பந்தலும், உள்நுழைவு பகுதியில் கோட்டை போன்ற வடிவமைப்புடன் முகப்பும் அமைக்கப்பட்டுள்ளன. நலத்திட்ட உதவி பெறுகிறவர்கள் மற்றும் பொதுமக்கள், முக்கிய விருந்தினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் அமர 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவையொட்டி ராமநாதபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம் விழாவில் கலந்துகொண்ட பின்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் கலந்துகொள்கின்றனர்.

பின்னர் விருதுநகர் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு அங்கிருந்து புறப்படுகின்றனர். மாலை 3 மணி அளவில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ.234 கோடியில் சிவகாசி, விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை தொகுதிகளில் முடிவடைந்த தாமிரபரணி (சீவலப்பேரி) கூட்டு குடிநீர் திட்டங்கள் தொடக்க விழா, ரூ.444 கோடியே 71 லட்சத்தில் அருப்புக்கோட்டை சாத்தூர், விருதுநகர் நகராட்சிகளுக்கான தாமிரபரணி புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் உள்பட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. 22 ஆயிரத்து 300 பேருக்கு இந்த விழாவில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

மத்திய மந்திரி டாக்டர் ஹர்சவர்த்தன் தலைமையிலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையிலும் நடைபெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். விழாவில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், தலைமை கொறடா ராஜேந்திரன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் வளர்மதி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசுகின்றனர். தலைமை செயலாளர் சண்முகம் வரவேற்று பேசுகிறார். விழாவில் மாவட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். முடிவில் கலெக்டர் கண்ணன் நன்றி கூறுகிறார்.

இதையொட்டி மருத்துவக் கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ள 22 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. விழாவிற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளதோடு பொதுமக்கள் சிரமம் இல்லாமல் விழாவுக்கு வரும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

Next Story