கரைவெட்டி சரணாலயத்திற்கு 45 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வருகை கலெக்டர் தகவல்


கரைவெட்டி சரணாலயத்திற்கு 45 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வருகை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 March 2020 11:00 PM GMT (Updated: 1 March 2020 7:39 PM GMT)

கரைவெட்டி சரணாலயத்திற்கு 45 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வருகை கலெக்டர் ரத்னா தகவல்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில், பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஓய்வுப்பெற்ற கல்லூரி பேராசிரியர் சிவசுப்பிரமணியன் தலைமையில் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் பறவைகள் கணக்கெடுப்பு பணியினை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் 300-க்கும் மேற்பட்ட வரித்தலை வாத்து இனமான பறவைகள் தற்போது கிழக்கு ஆசியா நாடுகளிலிருந்து வந்துள்ளன என கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 45 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் இப்பறவைகள் சரணாலயத்திற்கு வருகின்றன. மேலும், சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிக அளவில் பறவைகள் வருவதற்கான ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. கரைவெட்டி-பரதூர் முகப்பு சாலையிலிருந்து வேட்டக்குடி ஏரி வரை தார்சாலை அமைக்க ரூ.34 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்றார். முன்னதாக, சரணாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கான பொழுது போக்கு அடிப்படை வசதிகள், பறவைகளின் கண்காட்சி அரங்கம் ஆகியவற்றை கலெக்டர் ரத்னா பார்வையிட்டார்.

அப்போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மாவட்ட வன அலுவலர் இளங்கோவன், வனச்சரக அலுவலர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், வனவர் சக்திவேல், வனப்பாதுகாப்பாளர்கள், வனக்காவலர்கள் மற்றும் வேட்டை கருப்பு காவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story