சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் மின்சாரம் இல்லாததால் பயணிகள் அவதி


சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் மின்சாரம் இல்லாததால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 1 March 2020 11:30 PM GMT (Updated: 1 March 2020 10:54 PM GMT)

சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் மின்சாரம் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

கருங்கல்,

சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் இருக்கும்.

அதே போல் நேற்று ரெயில் சென்னையில் இருந்து மாலை புறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பயணிகள் அவதி

ரெயில் புறப்பட்டதில் இருந்து எஸ்-1 பெட்டியில் மின் விளக்குகள் எரியவில்லை. மேலும் மின்விசிறியும் இயங்கவில்லை. அந்த பெட்டியில் இருந்தவர்கள் விசாரித்த போது, மின் வினியோகத்தில் கோளாறு ஏற்பட்டது தெரிய வந்தது.

இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பெட்டியில் கைக்குழந்தையுடன் சிலரும், வயதானவர்களும் பயணம் செய்தனர். மின்சாரம் இல்லாததால் பயணிகள் அனைவரும் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

பயணிகள் ரெயில்வே அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டதால், ரெயில் விழுப்புரத்தை அடைந்ததும், மின் கோளாறு சீர் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மின்சாரம் வந்தது. பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Next Story