மாசி மக விழா: 63 நாயன்மார்கள் வீதியுலா கும்பகோணத்தில் நடந்தது


மாசி மக விழா: 63 நாயன்மார்கள் வீதியுலா கும்பகோணத்தில் நடந்தது
x
தினத்தந்தி 2 March 2020 10:45 PM GMT (Updated: 2 March 2020 7:14 PM GMT)

மாசி மக விழாவையொட்டி கும்பகோணத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா நடைபெற்றது.

கும்பகோணம்,

கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் கடந்த 28-ந் தேதி மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சாமி, அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நேற்று காலை வெள்ளிப்பல்லக்கில் விநாயகர், சுப்ரமணியர், ஆதி கும்பேஸ்வரர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், மூர்த்திநாயனார், மூர்க்கநாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று.

63 நாயன்மார்கள் வீதியுலா

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தனித்தனி படிச்சட்டங்களில் நாயன்மார்களின் உற்சவர்கள் இரட்டை வீதியுலாவாக ஆதிகும்பேஸ்வரர், நாகேஸ்வரன் கோவில் வீதிகளில் உலாவந்தன.

அப்போது கோவில் யானை மங்களம் முன்னே செல்ல, திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்ட தலைவர் நடராஜன் தலைமையில் பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடி சென்றனர். தொடர்ந்து 63 நாயன்மார்களும், அதன்பின்னர் சாமி, அம்மனும் வீதியுலா நடைபெற்றது.

பின்னர் இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் யானை அம்பாரியில் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 8-ந் தேதி மகாமகம் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

Next Story