திருச்சி அருங்காட்சியகத்தில் சிலைகள் திருட்டு: சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தவர் கைது


திருச்சி அருங்காட்சியகத்தில் சிலைகள் திருட்டு: சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 5 March 2020 6:00 AM IST (Updated: 5 March 2020 12:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருங்காட்சியகத்தில் சிலைகள் திருட்டுப்போன வழக்கில் போலீசாரால் தேடப்பட்டவர் சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்தார். அவர் சொந்த ஊருக்கு வந்தபோது திருச்சியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கும்பகோணம்,

திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு 31 சிலைகள் திருட்டு போனது. இந்த திருட்டு தொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 21 பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டன.

இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள நெற்புகப்பட்டியை சேர்ந்த சரவணபெருமாள்(வயது 40), சிங்கப்பூருக்கு தப்பி சென்று அங்கு தலைமறைவாக இருந்தார்.

கைது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணபெருமாள் சிங்கப்பூரில் இருந்து தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு வந்தார். இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே போலீசார் சரவண பெருமாளை கைது செய்யும் முயற்சியில் இறங்கினர்.

இந்த நிலையில் சரவணபெருமாள் திருச்சிக்கு வந்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் திருச்சியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்த சரவணபெருமாளை கைது செய்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் அவரை கும்பகோணத்துக்கு அழைத்து வந்து நீதிபதி மாதவராமானுஜம் முன்பு ஆஜர்படுத்தினர். சரவண பெருமாளை வருகிற 17-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவரை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story