வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 39,392 பேர் எழுதினர்


வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 39,392 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 5 March 2020 7:00 AM GMT (Updated: 5 March 2020 6:53 AM GMT)

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 39,392 மாணவ- மாணவிகள் எழுதினர். தமிழ் முதல் தாள் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.

வேலூர், 

தமிழ்நாட்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 26-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரக்கோணம், வாணியம்பாடி ஆகிய 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன.

இந்த கல்வி மாவட்டங்களில் உள்ள 369 பள்ளிகளில் படிக்கும் 41,531 மாணவ- மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 171 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது.

காலை 9 மணிமுதலே மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் தேர்வு நடைபெறும் பள்ளி வளாகங்களில் குழுவாக அமர்ந்து படித்தனர். தங்கள் சந்தேகங்களை தோழிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். 10 மணிக்கு மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் தீவிர சோதனை செய்யப்பட்டனர். மேலும் கைக்கெடிகாரம் கட்டவோ, கால்குலேட்டர் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்கள் கொண்டுசெல்லவோ அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வு மையங்களில் மாணவ- மாணவிகள் காப்பியடிப்பதை கண்காணிக்கவும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும் 250 பேர் கொண்ட பறக்கும் படை மற்றும் நிலையான படை அமைக்கப்பட்டிருந்தது. பறக்கும்படையினர் தேர்வு மையங்களுக்குசென்று கண்காணித்தனர். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 41,531 மாணவ- மாணவிகளில் 39,392 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2,139 பேர் தேர்வு எழுதவரவில்லை.

தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தமிழ் முதல்-தாள் மிகவும் எளிதாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.

Next Story