ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு எதிரொலி மும்பை, தானேயில் யெஸ் வங்கி கிளைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது


ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு எதிரொலி மும்பை, தானேயில் யெஸ் வங்கி கிளைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது
x
தினத்தந்தி 7 March 2020 11:49 PM GMT (Updated: 7 March 2020 11:49 PM GMT)

மும்பை, தானேயில் உள்ள யெஸ் வங்கி கிளைகளில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மும்பை, 

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் யெஸ் வங்கியின் செயல்பாட்டை ரிசர்வ் வங்கி முடக்கியது. மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுக்க தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் கிடைக்கும் பணத்தை எடுக்க முயற்சித்து வருகிறார்கள்.

இதற்காக வங்கி முன்பும், ஏ.டி.எம்.மையங்கள் முன்பும் நேற்று முன்தினம் வரிசை கட்டி நின்றனர். நேற்றும் தங்களது பணத்தை எடுக்க வங்கி மற்றும் ஏ.டி.எம். முன்பு குவிந்தனர்.

மும்பையில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிளைகளிலும், ஏ.டி.எம். களிலும் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்ததை காண முடிந்தது.

வாடிக்கையாளர் வேதனை

இதேபோல தானே, டோம்பிவிலி, கல்யாண், நவிமும்பை பகுதிகளிலும் யெஸ் வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்தனர். வங்கிகளில் கூட்டம் கூடியதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், “வங்கிகளில் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து தான் அங்கு பணத்தை சேமித்து வைக்கிறோம். அங்கும் பாதுகாப்பு இல்லாமல் போனால் என்ன செய்வது” என வேதனையுடன் கூறினார்.

Next Story