காட்டுமாடுகளால் விளைநிலங்கள் பாதிப்பு - விவசாயிகள் வேதனை


காட்டுமாடுகளால் விளைநிலங்கள் பாதிப்பு - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 9 March 2020 10:15 PM GMT (Updated: 9 March 2020 7:42 PM GMT)

இளையான்குடி அருகே காட்டுமாடுகளால் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள மெய்யனேந்தல், நெடுங்குளம், முனைவென்றி, தெ.புதுக்கோட்டை, கச்சாத்த நல்லூர் ஆகிய கிராமங்களிலும் அருகில் உள்ள ஊர்களிலும் காட்டுமாடுகளால் விளைநிலங்கள் அழிகின்றன. இதனால் கிராமத்தினர் மிகவும் வேதனையில் உள்ளனர். சில வருடங்களுக்குமுன் ஒருசில மாடுகள் மட்டுமே எமனேஸ்வரம்-குமாரக்குறிச்சி கண்மாய்க்குள் இருந்தன. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் பெருகி இரவு நேரத்தில் படையெடுத்து விளைநிலங்களில் புகுந்து பருத்தி, மிளகாய் தோட்டங்களை நாசம் செய்கின்றன.

இதனை தடுப்பதற்கு கிராமத்தினரால் முடியவில்லை. இவை அதிக அளவில் இருப்பதால் மக்களையும் தாக்குகின்றன. பல கிராமங்களில் முற்றிலுமாக விவசாயத்தை கைவிட்டதால் இந்த பகுதியில் காட்டுக்கருவேலம் மரங்கள் அடர்ந்து காடுகளாக மாறிவிட்டதால் காட்டு மாடுகளும் அதிக அளவில் பெருகிவிட்டன.

எனவே காட்டுமாடுகளின் தொல்லையில் இருந்து மீட்டெடுக்க தாலுகா நிர்வாகமும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள வனத்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளும் கலந்தாலோசித்து தடுப்பு நடவடிக்கை எடுத்து கிராம மக்களையும் விளைநிலங்களையும் காப்பாற்ற வேண்டும் என அனைத்து கிராமத்தினரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Next Story