மண்மங்கலம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஒரே பதிவு எண்ணுடன் நின்ற 2 லாரிகள் போலீசார் விசாரணை


மண்மங்கலம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஒரே பதிவு எண்ணுடன் நின்ற 2 லாரிகள் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 March 2020 4:00 AM IST (Updated: 16 March 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மண்மங்கலம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே ஒரே பதிவு எண்ணுடன் நின்ற 2 லாரிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் வாங்கல் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து மற்றும் போலீசார் மண்மங்கலம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனத்தில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு டி.என்.28 ஏ.கே.4065 என்கிற பதிவு எண்ணில் போலியான நம்பர் பிளேட்டுடன் 2 டாரஸ் லாரிகள் அங்கு கேட்பாரற்று நின்று கொண்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த லாரிகளின் உரிமையாளர்கள் யார்? என்பது பற்றி விசரித்தனர். அந்த லாரிகள் யாருடையது என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும் மோசடி செய்யும் நோக்கில் ஒரே பதிவு எண்ணில் லாரிகளை வைத்திருக்கலாம் என போலீசார் கருதினர்.

போலீசார் விசாரணை

இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து, வாங்கல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இந்திய தண்டனை சட்ட பிரிவு 420, 468 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த 2 லாரிகளையும் கைப்பற்றினார்கள். மேலும் காவிரியாற்றில் மணல் கடத்தலுக்காக? அந்த லாரிகளில் ஒரே பதிவு எண் எழுதப்பட்டதா அல்லது மோசடி செய்து அந்த லாரியை விற்பதற்காக ஒரே பதிவு எண்ணை எழுதி வைத்துள்ளனரா? என விசாரித்து இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் அந்த லாரியின் பதிவுஎண் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் கரூர்-குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், போலீஸ் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் மணல் கடத்தல் வழக்கில் பிடிபட்ட லாரிகள் ஆங்காங்கே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பதிவுஎண்ணை மாற்றி மோசடி ஏதும் நடக்கிறதா? எனவும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story