இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளை ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை திருச்செங்கோட்டில் பரபரப்பு


இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளை ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகை திருச்செங்கோட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2020 5:00 AM IST (Updated: 17 March 2020 1:15 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் விற்பனை நிலைய ஒப்பந்தத்தை வேறு சங்கத்திற்கு கொடுக்க முயற்சிப்பதாக கூறி இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளை ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்ட சம்பவம் திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்செங்கோடு,

திருச்செங்கோட்டில், சங்ககிரி மெயின் ரோட்டில் உள்ள கருவேப்பம்பட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனுக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இதனை பல ஆண்டுகளாக தனியார் ஒருவர் நடத்தி வந்தார். இதில் ந‌‌ஷ்டம் ஏற்பட்டதால் அவர் விட்டு விட்டார். இதையடுத்து பெட்ரோல் விற்பனை நிலையத்தை திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் ஒப்பந்தம் செய்து நடத்தி வந்தனர். அதன்படி 3 ஆண்டுகள் வாய் மொழி ஒப்பந்தமும், ஒரு ஆண்டு எழுத்துப்பூர்வ ஒப்பந்தமும் செய்து பெட்ரோல் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் ரூ.34 லட்சத்திற்கு புதிய எந்திரம், நவீன வசதிகளை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒரு ஆண்டு ஒப்பந்தம் முடிவடைந்தது. இது ஒருபுறம் இருக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், ரிக் உரிமையாளர்கள் சங்கத்திடம் புதிய ஒப்பந்தம் செய்யாமல் சங்ககிரியில் உள்ள ஒரு சங்கத்திற்கு நிர்வாகத்தை கொடுக்க முயன்றதாக தெரிகிறது.

முற்றுகை

இதையறிந்த திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கந்தசாமி, செயலாளர் தனசேகர், பொருளாளர் சுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ரிக் உரிமையாளர்கள் நேற்று திடீரென கருவேப்பம்பட்டியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உள்ளே இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என கோரி அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதை அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story