கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2020 4:30 AM IST (Updated: 17 March 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

திருவெறும்பூர் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு போலீசார் குவிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துவாக்குடி,

திருச்சி மாநகராட்சி 63-வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார்கோட்டை நத்தக் களம் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு அரசு அறிவித்தது. இந்த சுத்திகரிப்பு நிலையம் விவசாய நிலத்தில் அமைக்கப்பட இருப்பதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, நேற்று அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இதனையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தாமல் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

தர்ணா

இதற்கிடையில், பூமிபூஜை நடைபெற்ற இடத்தில் போராட்டம் நடத்தவிடாமல் போலீசார் குவிக்கப்பட்டதால், அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் இந்த திட்டத்தை கைவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனறும் தெரிவித்தனர்.

இதுகுறித்து போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கூறுகையில், இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதால் 600 ஏக்கர் விவசாய நிலமும், நிலத்தடி நீரும், காற்றும் மாசுபடும். எனவே இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இங்கு தொடங்கப்பட்டுள்ள திட்டம் விவசாய நிலத்தை பாதிக்கும் நிலை உள்ளது. இந்த திட்டத்தை நிறுத்தாவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.

கலெக்டரிடம் மனு

இந்தநிலையில் கீழகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த ராகவன் என்பவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்த மனுவில், நத்தக்களத்தில் பழங்காலத்தில் பயன்படுத்திய பானை ஓடுகள், தொன்மைவாய்ந்த கட்டிடக்கலை கருங்கற்கள் புதைந்து கிடக்கின்றன. எனவே இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது. அது மட்டுமின்றி தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து புரதான அடையாளங்களை மீட்டு பாதுகாத்திட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Next Story