வருகிற 31-ந்தேதி வரை புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தியேட்டர்கள், வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன


வருகிற 31-ந்தேதி வரை புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தியேட்டர்கள், வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன
x
தினத்தந்தி 18 March 2020 12:26 AM GMT (Updated: 18 March 2020 12:26 AM GMT)

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக பள்ளி, கல்லூரி களுக்கு இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. தியேட்டர்கள், வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன.

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள் நமச் சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், அரசு செயலாளர்கள் அன்பரசு, பிரசாந்த்குமார் பாண்டா, கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு நடவடிக்கை

கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க புதுவை அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து நிருபர் களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக புதுவை அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நோய் தாக்கம், பரவாமல் தடுப்பது, கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பாதிப்பு இல்லை

புதுவையில் சந்தேகப்படும்படியான 23 பேர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார்கள். அவர்களையும் பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுவை சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மாநிலம் என்பதால் எல்லை பகுதியில் சோதனை நடத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப் படுகிறது. அதே நேரத்தில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். மேலும் சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன. சன்டே மார்க்கெட்டும் செயல்படாது.

போட்டிகள் நடத்தக்கூடாது

எந்தவிதமான போட்டிகள், பொதுக்கூட்டங்களும் நடத்தக்கூடாது. திருமண விழாக்களில் அதிக அளவில் மக்கள் கூடுகின்றனர். அவ்வாறு இல்லாமல் குறைந்த எண்ணிக்கையில் உறவினர்களை மட்டும் அழைத்து திருமணங்களை நடத்த கேட்டுக்கொள்கிறோம்.

பொது இடங்களில் பொதுமக்கள் கைகளை கழுவுவதற்கு சோப்பு, தண்ணீர் வைக்க உள்ளாட்சித்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். அதேபோல் மார்க்கெட் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

சுற்றுலா பயணிகள்

வாகனங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் நிதியிலிருந்து ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டு சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்கப்படும். தேவைப்படும் டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைக்காக ரூ.7½ கோடி சுகாதாரத்துறை நிதி செலவிடப்பட உள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கண்காணிக்க சென்னை, திருச்சி விமான நிலைய அதிகாரிகளை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கிறோம். புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துள்ளது.

மது பார்கள்

கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் அதிக மக்கள் கூடுகின்றனர். மக்களின் மத நம்பிக்கையை தடுத்து நிறுத்த முடியாது. மதுபார்களை மூடுவது குறித்து அடுத்தகட்டமாக முடிவு செய்யப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story