2 கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது
பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் பகுதியில் கடந்த மாதம் கல்லப்பாடி வலசை, கே.வி.குப்பத்தை அடுத்த காங்குப்பம், குடியாத்தத்தை அடுத்த வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நகைகளை பறித்து விட்டு தப்பின. 3 இடங்களிலும் மொத்தம் 12 பவுன் நகையை அவர்கள் பறித்தனர். அதேபோல் சித்தூர் கேட் பகுதியில் மாடு வியாபாரியிடம் இதே நபர்கள் 48 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் அணைக்கட்டு தாலுகா வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுந்தரம் மகன் ரஞ்சித்குமார் (வயது 24), அதே கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் மகன் அன்பழகன் (24) ஆகிய இருவரது உருவப்படங்கள் அதில் பதிவாகியிருந்தனர். இதனை தொடர்ந்து ரஞ்சித்குமார் மற்று அன்பழகனை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்கள் பறித்துச்சென்ற 10 பவுன் நகை மீட்கப்பட்டதோடு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது வழிப்பறி தொடர்பான பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவர்களது குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த இருவரையும் குண்டர்சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரையை ஏற்று கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதனையடுத்து ரஞசித்குமார், அன்பழகன் ஆகியோர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு வேலூர் மத்திய சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story