திருப்பூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்துவதில் இருந்து மேலும் 54 பேர் விடுவிப்பு


திருப்பூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்துவதில் இருந்து மேலும் 54 பேர் விடுவிப்பு
x
தினத்தந்தி 31 March 2020 11:15 PM GMT (Updated: 31 March 2020 11:40 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்துவதில் இருந்து மேலும் 54 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். 1,312 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் டெல்லி, மும்பை போன்ற பகுதிகளுக்கு சென்று திரும்பியவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மாவட்ட சுகாதாரத்துறை மூலமாக கண்காணித்து வருகிறார்கள்.

கண்காணிப்பு காலம் முடிந்த பின்னரும் நோய் தொற்று எதுவும் இல்லாவிட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் மட்டும் 5 பேர் இந்த கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,366 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் 54 பேர் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்ததாலும் அவர்களுக்கு நோய் தொற்று இல்லாததாலும் தனிமைப்படுத்தப்படுவதில் இருந்து 54 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் 1,312 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

இவர்களில் டெல்லியில் உள்ள மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 39 பேரும் அடங்குவார்கள். இவர்களுக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் அதிகம் பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் ஆவார்கள். அதனால் திருப்பூருக்கு திரும்பிய 39 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Next Story