திருப்பூர் அம்மா உணவகத்தில் ஆணையாளர் ஆய்வு


திருப்பூர் அம்மா உணவகத்தில் ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 3 April 2020 4:30 AM IST (Updated: 3 April 2020 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் நேற்று ஆய்வு செய்தார்.

திருப்பூர், 

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 10 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போதும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படுகிறது. காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளையும் இங்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வழக்கத்தை விட இப்போது அதிகம் பேர் உணவு உண்டு வருகிறார்கள். 

இந்த நிலையில் திருப்பூர் சந்திராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் நேற்று ஆய்வு செய்தார். உணவின் தரம், சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கும் முறை, சுற்றுப்புற பராமரிப்பு குறித்து ஆணையாளர் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். இந்த உணவகத்தில் தினமும் 3 வேளையும் சேர்த்து 400 முதல் 500 பேர் உணவு சாப்பிடுகிறார்கள் என்று உதவி ஆணையாளர் சுப்பிரமணியம் தெரிவித்தார். சுகாதார முறையில் உணவு தயார் செய்து வழங்க ஆணையாளர் அறிவுறுத்தினார். அத்துடன் உணவையும் சாப்பிட்டு பார்த்தார்.

பின்னர் ஆணையாளர் கூறும்போது, பொதுமக்களின் வசதிக்காக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு பிறகு இரவு நேரத்திலும் அம்மா உணவகத்தில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. அம்மா உணவகத்துக்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்ட வடிவில் கோடு வரையப்பட்டுள்ளது. சாப்பிட வருபவர்கள் தங்கள் கைகளை நன்கு கழுவி விட்டு வரும் வகையில் தண்ணீர் மற்றும் சோப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. 

அம்மா உணவகத்தில் பணியாற்றுபவர்கள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கவும், உணவு தயாரிக்கும் பாத்திரங்கள் வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

Next Story