மராட்டியத்தில் ஒரே நாளில் 81 பேருக்கு கொரோனா - பாதித்தவர்கள் எண்ணிக்கை 416 ஆனது
மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 416 ஆக அதிகரித்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மும்பைக்கு கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. நேற்று முன்தினம் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 335 ஆக இருந்தது.
இந்தநிலையில் நேற்று மராட்டியத்தில் மேலும் 81 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் மும்பையில் மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதவிர புனேயில் 6 பேருக்கும், பிம்பிரி சின்ஞ்வட்டில் 3 பேருக்கும், அகமதுநகரில் 9 பேருக்கும், தானேயில் 5 பேருக்கும், புல்தானாவில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்து உள்ளது.
இந்தநிலையில் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க 30 ஆஸ்பத்திரிகள் கண்டறியப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் கூறியதன் பேரில் மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. இதன்படி கண்டறியப்பட்ட 30 ஆஸ்பத்திரிகளில் இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த ஆஸ்பத்திரிகளில் 2 ஆயிரத்து 305 படுக்கை வசதிகள் இருக்கும் என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே கூறியுள்ளார்.
இதேபோல மராட்டியத்தில் ரத்தம் மூலம் கொரோனா சோதனை மேற்கொள்ளவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. தற்போது சளி மாதிரியை வைத்தே ஒருவருக்கு கொரோனா உள்ளதா என்பது கண்டறியப்பட்டு வருகிறது. இந்த சோதனைக்கு அதிக நேரம் எடுக்கும். ரத்தத்தின் மூலம் செய்யப்படும் சோதனை மூலம் 5 நிமிடத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு எதுவும் உள்ளதா என்பதை கண்டறிய முடியும்.
Related Tags :
Next Story