விருதுநகர் மாவட்டத்தில் மளிகை பொருட்கள் விலை உயர்வு


விருதுநகர் மாவட்டத்தில் மளிகை பொருட்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 5 April 2020 4:00 AM IST (Updated: 5 April 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விலை நிர்ணயம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர், 

உணவுப்பொருட்களின் முக்கிய வணிக மையமான விருதுநகரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் அரிசி, பருப்பு, மல்லி, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அனுப்ப மாவட்ட நிர்வாகம் கடந்த வாரம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் விருதுநகரில் உணவு உற்பத்தி நிறுவனங்கள் முழுமையாக செயல்படாத நிலையில் அத்தியாவசிய மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று கருதிய மாவட்ட நிர்வாகம், உணவுப் பொருள் உற்பத்தியாளர்களை உற்பத்தியை தொடங்குமாறு அறிவுறுத்தியது. ஆனாலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட முடியாத நிலை தொடருகிறது.

இந்த நிலையில் சில அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை உயரத்தொடங்கியுள்ளது. காய்கறி விலையை கட்டுப்படுத்தும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும் காய்கறிகளை வினியோகம் செய்ய பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் மளிகை பொருட்கள் விற்பனைக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. மளிகை பொருட்களை வீடுகளுக்கு கொண்டு கொடுப்பதற்கு மட்டும் போலீஸ் நிர்வாகம் போலீஸ் நண்பர்கள் குழு மூலம் ஏற்பாடு செய்துள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த ஏற்பாட்டினை செய்துள்ள போதிலும் பொருட்கள் வினியோகத்துக்கு சேவை கட்டணமும் வசூலிக்கும் நிலை உள்ளது. மளிகை பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பொருட்களின் இருப்பு குறைவு, சரக்கு வாகன கட்டண உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் வியாபார தொழில்துறை சங்க பிரதிநிதிகளை அழைத்துபேசி அத்தியாவசிய மளிகை பொருட்களுக்கு வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் விலை நிர்ணயம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story