திருச்செங்கோடு அருகே 2 பெண்டாட்டிக்காரர் அரிவாளால் வெட்டிக்கொலை


திருச்செங்கோடு அருகே 2 பெண்டாட்டிக்காரர் அரிவாளால் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 22 April 2020 4:00 AM IST (Updated: 22 April 2020 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு அருகே 2 பெண்டாட்டிக்காரர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது மருமகன் போலீசில் சரண் அடைந்து உள்ளார்.

எலச்சிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 73). இவருக்கு பொன்னாயி (73), பாப்பாத்தி (63) என்ற 2 மனைவிகள் உள்ளனர். ராஜாமணி- பாப்பாத்தி தம்பதிக்கு சாந்தி, சுலோச்சனா என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் சுலோச்சனாவுக்கும், அதேபகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நல்லமுத்து (42) என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நல்லமுத்து நேற்று குடும்பத்துடன் மாமனார் ராஜாமணியின் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது ராஜாமணி மூத்த மகள் சாந்தி குடும்பத்திற்கு மட்டுமே சீர்கள் வழங்குவதாக கூறி அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

போலீசில் சரண்

அப்போது தகராறு முற்றியதில் நல்லமுத்து, தனது மாமனார் ராஜாமணியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு கழுத்தின் பின்பகுதியில் வெட்டு விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜாமணியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போலீசார் தேடி வந்த நல்லமுத்து வெப்படை போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மோடமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story