பரமத்திவேலூர் அருகே லாரியில் வந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை


பரமத்திவேலூர் அருகே லாரியில் வந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 22 April 2020 4:30 AM IST (Updated: 22 April 2020 2:15 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே லாரியில் வந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரமத்திவேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். லாரிக்குள் வடமாநிலத்தை சேர்ந்த 24 பேர் இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து பரமத்திவேலூர் தாசில்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் அங்கு சென்றார். விசாரணையில், லாரியில் வந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பில்வாலா மற்றும் சித்தோடுகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் திருவனந்தபுரத்தில் தங்கி தள்ளுவண்டியில் நிலக்கடலை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவால் வெளியே சென்று வியாபாரம் செய்ய முடியாததால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மோட்டார் சைக்கிள்களை ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இதையறிந்த அவர்கள் லாரி டிரைவரிடம் தங்களை ராஜஸ்தான் மாநிலத்தில் கொண்டு விடுமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் ஓசூர் வரை மட்டும் லாரி செல்வதாக கூறி அவர்களை ஏற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர்களுக்கு அதிகாரிகள் உணவு வழங்கினர். மேலும் சுகாதாரத்துறையினர் மூலம் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு மண்டல சிறப்பு குழு அலுவலர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் முனியநாதன், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குனர் அபய்குமார்சிங், பரமத்திவேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி, வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணி ஆகியோரும் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் வருகிற 3-ந் தேதி ஊரடங்கு முடியும் வரை பரமத்திவேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் கல்லூரியில் தங்க வைக்கப்படுவர் என்று தாசில்தார் செல்வராஜ் தெரிவித்தார்.

Next Story