ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு பள்ளிவாசல்களுக்கு 85,170 கிலோ பச்சரிசி: கலெக்டர் ராமன் தகவல்
சேலம் மாவட்டத்தில் ரம்ஜான் நோன்பைமுன்னிட்டு பள்ளிவாசல்களுக்கு 85,170 கிலோ பச்சரிசி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க அரசு வழங்கும் அரிசியை பள்ளிவாசல்களுக்கு வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன் மற்றும் சேலம் மாவட்ட முத்தவல்லிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களுக்கு நோன்பு கஞ்சி வழங்குவது தொடர்பாக சேலம் மாவட்ட முத்தவல்லிகள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசியதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி வரை பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவும் வீரியத்தை கருத்தில் கொண்டும், இந்த நோய் உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் மோசமான நோய் என்பதாலும் சமூக விலகல் தீவிரமாக பின்பற்றப்படுகிறது. இந்த தருணத்தில் இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் ரம்ஜான் நோன்பு தொடங்க உள்ள நிலையில், முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள், தர்காக்களில் தொழுகை செய்வதையும், நோன்பு திறக்க கூடுவதையும் தவிர்க்க வேண்டும்.
பள்ளிவாசல்களுக்கு கடந்த ஆண்டை போலவே பச்சரிசியை தகுதியான குடும்பங்களுக்கு ஒவ்வொரு பள்ளிவாசல் நிர்வாகிகளும் பிரித்து தன்னார்வலர்களின் உதவியுடன் வீடுகளுக்கு சென்று வழங்குவார்கள். அதேபோல் புனித ரமலான் காலத்தில் மற்றவர்கள் தானமாக வழங்கும் பொருட்களையும் இதே வழிமுறையை பின்பற்றி வீடு, வீடாக தன்னார்வ தொண்டர்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரித்து வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு முஸ்லிம்களுக்கு கஞ்சி தயாரிப்பதற்காக 85,170 கிலோ பச்சரிசி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் உள்ள 44 பள்ளிவாசல்களின் முத்தவல்லிகளிடமிருந்து 18,949 பேருக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க மொத்தம் மாவட்டம் முழுவதும் 85,170 கிலோ பச்சரிசி வழங்கப்பட உள்ளது என்று அவர் பேசினார்.
Related Tags :
Next Story