சேலத்தில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட 5 மளிகை கடைகளுக்கு ‘சீல்’
சேலத்தில் முழு ஊரடங்கை மீறி செயல்பட்ட 5 மளிகை கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
சேலம்,
சேலம் மாநகராட்சியில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 25-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் மற்றும் உழவர் சந்தைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்றும், அதையும் மீறி கடைகள் திறந்து விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் மூலம் நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கொண்டலாம்பட்டி மண்டலத்துக்கு உட்பட்ட அன்னதானப்பட்டி அடுத்த பழனியப்பா நகர் பகுதியில் நேற்று காலை முழு ஊரடங்கு உத்தரவை மீறி 2 மளிகை கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தது தெரியவந்தது. அப்போது அங்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட 2 மளிகை கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.
அதேபோல் நாகப்பன் தோட்டம் பகுதியில் செயல்பட்ட ஒரு மளிகை கடையும், சஞ்சீவிராயன் பேட்டை பகுதியில் தடையை மீறி செயல்பட்ட 2 மளிகை கடைகளும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. சேலத்தில் நேற்று ஒரே நாளில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக மொத்தம் 5 மளிகை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story