கொரோனா பேரிடர்காலத்தில் முதல்-அமைச்சர் நடவடிக்கையால் மக்கள் நிம்மதியாக உள்ளனர் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி


கொரோனா பேரிடர்காலத்தில் முதல்-அமைச்சர் நடவடிக்கையால் மக்கள் நிம்மதியாக உள்ளனர் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 29 April 2020 11:26 PM GMT (Updated: 29 April 2020 11:26 PM GMT)

இக்கட்டான இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தமிழக மக்கள் தனிமையில் இருந்தாலும் நிம்மதியாக உள்ளனர் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர், 

விருதுநகர் சொக்கநாதர்சுவாமி கோவிலில் அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கிய அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இக்கட்டான கொரோனா பேரிடர் காலத்திலும் அம்மா உணவகங்கள் மூலம் ஆதரவற்றோருக்கும், ஏழை-எளியோருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 8 அம்மா உணவகங்களிலும் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்தை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கலெக்டரிடம் வழங்கி உள்ளேன். தேவைப்பட்டால் கூடுதல் நிதி தருவதாகவும் தெரிவித்துள்ளேன். அம்மா உணவகங்கள் மூலம் தமிழகத்தில் அனைவருக்கும் உணவு கிடைத்து வருகிறது. யாருக்கும் உணவு கிடைக்கவில்லை என்ற நிலை இல்லை. இதை மத்திய அரசே பாராட்டி உள்ளது.

பட்டாசு ஆலைகளை பொறுத்தமட்டில் உரிமையாளர்கள் மற்றும் கலெக்டருடன் பேசி ஆலைகள் செயல்பட முதல்-அமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். ஆனாலும் மூலப்பொருள் தட்டுப்பாட்டாலும், சமூக விலகல் தேவை கருதியும் பட்டாசு ஆலைகள் செயல்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும் பட்டாசு தொழிலாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பட்டாசு ஆலை உரிமையாளர்களும், அரசும் வழங்கி உள்ளது. நாங்களும் கண்காணித்து வருகிறோம். சிறு, குறு தொழில்கள் செயல்பட முதல்-அமைச்சர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அடுத்த மாதம் 3-ந்தேதிக்கு பின்னர் பட்டாசு ஆலைகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி உள்பட அனைத்து வல்லரசு நாடுகளும் விலகி இருப்போம் என கூறி வரும் நிலையில், மு.க.ஸ்டாலின் மட்டும் ஒன்றிணைவோம் வா என அனைவரையும் அழைத்து அரசியல் செய்து வருகிறார். இவ்வாறு செய்வது முறையல்ல. மேலும் அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உண்மையான குறைகளை சுட்டிக்காட்டலாம். ஆனால் அவர் நிறைகளை தவிர்த்து குறைகளை மட்டுமே கூறி வருகிறார். இவ்வாறு எதிர்கட்சியினர் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து குறை சொல்வது பற்றி கவலை இல்லை. கொரோனா பேரிடரால் உலக வல்லரசான அமெரிக்காவே திணறி வரும் நிலையில் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் எடுத்துள்ள நடவடிக்கையால் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மக்கள் தனிமையில் இருந்தாலும், விலகி இருந்தாலும் முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் நிம்மதியாக உள்ளனர். யார் குறை கூறினாலும் நாட்டு மக்கள் நலனுக்காக பிரதமரும், முதல்-அமைச்சரும் உழைத்து வருகின்றனர். நாட்டு மக்கள் நலனுக்காக தமிழக மக்கள் நலனுக்காக நாங்கள் தொடர்ந்து உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட அறங்காவலர்குழு தலைவர் பலராமன், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சாத்தூர் பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் உள்ள அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

Next Story