பாதிப்பு எண்ணிக்கை 142 ஆக உயர்வு: கோவையை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை


பாதிப்பு எண்ணிக்கை 142 ஆக உயர்வு: கோவையை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 2 May 2020 10:29 PM GMT (Updated: 2 May 2020 10:29 PM GMT)

கோவையை சேர்ந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.

கோவை,

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 44 வயது ஆண் ஒருவர் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கடந்த 30-ந் தேதி அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். வெளியூரில் இருந்து வந்ததால் அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தில் அவரின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

142 ஆக உயர்வு

இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்ந்து உள்ளது. இதனை தொடர்ந்து அவருடைய மனைவி, குழந்தைகள், அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் மற்றும் நேரடி தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 24-ந் தேதி ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களுடன் சேர்த்து அப்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 141 ஆக இருந்தது. இந்த நிலையில் ஒருவார காலமாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்து வந்தது. இதன் மூலம் கோவை மாவட்டம் நேற்று முன்தினம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறியது.

இந்த நிலையில் கோவையில் ஒரு வாரத்துக்கு பிறகு மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர் கோவை, சென்னை 2 இடங்களிலும் சிகிச்சை பெற்றுள்ளதால் கொரோனா நோய் தொற்று எங்கு இருந்து பரவியது என்பது தெரியாமல் சுகாதார துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:-

கிருமி நாசினி

கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நபர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவருடன் வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனைத்தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு முழுவதும் கிருமி நாசினி தெளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேபோல் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கும் அனைத்து டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றார்.

44 பேர் அனுமதி

இந்த நிலையில் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சந்தேகத்துடன் நேற்று 44 பேர் அனுமதிக்கப்பட்டனர். அதில் 19 ஆண்கள், 23 பெண்கள், தலா ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என்று மொத்தம் 44 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர்களின் உடல்நிலையையும் டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

Next Story