கமுதி அருகே ஊரடங்கு நேரத்தில் துப்பாக்கியுடன் வாலிபர் கைது


கமுதி அருகே ஊரடங்கு நேரத்தில் துப்பாக்கியுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 May 2020 10:30 PM GMT (Updated: 3 May 2020 9:40 PM GMT)

ஊரடங்கு நேரத்தில் துப்பாக்கியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கமுதி, 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அம்மன்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல். அவருடைய மகன் அஜித் என்ற விக்னேசுவரன்(வயது 23). இவர் மீது கமுதி, மண்டலமாணிக்கம், திருச்சுழி, வீரசோழன், அபிராமம், சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கஞ்சா, கற்பழிப்பு முயற்சி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும் கமுதி எட்டுக்கண் பாலம் அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு, 3½ பவுன் நகை வழிப்பறி ஆகிய வழக்குகளில் அஜித்தை போலீசார் தேடி வந்தனர். மேலும் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் நடந்த மோதலில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டை தாக்கி, மிரட்டல் விடுத்த வழக்கிலும் அஜித் தொடர்புடையவர் ஆவார்.

இந்த நிலையில் கமுதி குண்டாற்று பாலம் அருகே கமுதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தில் இருந்த அஜித்தை மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி, அரைக்கிலோ கஞ்சா ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவருடன் வந்த மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து, விருதுநகர் சிறையில் அடைத்தனர். ஊரடங்கு நேரத்தில் அவர் எதற்காக துப்பாக்கி வைத்திருந்தார், தப்பி ஓடிய நபர்கள் யார்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story