திருப்பூர் மாவட்டத்தில் இன்று திறப்பு: தயார் நிலையில் டாஸ்மாக் கடைகள்


திருப்பூர் மாவட்டத்தில் இன்று திறப்பு: தயார் நிலையில் டாஸ்மாக் கடைகள்
x
தினத்தந்தி 6 May 2020 11:45 PM GMT (Updated: 2020-05-07T00:55:55+05:30)

திருப்பூர் மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) திறக்கப்படுவதால் டாஸ்மாக் கடைகள் தயார் நிலையில் உள்ளன. மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் கடைகளுக்கு முன்பு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருப்பூர், 

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் இன்று(வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 101 கடைகள் உள்பட மாவட்டத்தில் 238 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் மங்கலம், பல்லடம், உடுமலை, தாராபுரம் ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளுக்கு உட்பட்ட 4 கடைகள், மாநகரில் ஒரு கடை என 5 கடைகள் செயல்படாது. இதனால் இன்று(வியாழக்கிழமை) 233 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வருபவர்கள் அனைவரும் குடையுடன் வர வேண்டும். குடை கொண்டு வந்தால் தான் மதுபானம் கிடைக்கும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஏற்கனவே அறிவித்துள்ளார். அதுபோல் டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு கட்டைகளை கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடை வளாகத்தில் 5 பேர் மட்டுமே நிற்க வேண்டும். அனைவரும் முககவசம் அணிய வேண்டும். விற்பனையாளர்கள் முககவசம், கையுறை கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுப்பிரியர்கள் 6 அடி துரத்துக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்கும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று டாஸ்மாக் கடைகளை சுத்தம் செய்து தயார்படுத்தும் பணிகள் நடந்தன. பல்லடத்தில் ஒரு டாஸ்மாக் கடைக்கு முன்பு ஒலி பெருக்கி கட்டி மது வாங்க வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது.

காலை 10 மணி முதல் 5 மணி வரை மது விற்பனை செய்யப்படும். இதில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், 40 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் 1 மணி முதல் 3 மணி வரையும், 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மது வாங்க டாஸ்மாக் கடைகளுக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டம் அதிகமாக இருந்தால் டோக்கன் வழங்கப்பட்டு வரிசையில் வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கடைக்கு 2 போலீஸ்காரர், 2 ஊர்க்காவல் படையினர் அல்லது தன்னார்வலர்கள் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். கடைகளுக்கு அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் இருந்தால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட கடைகளின் பாதுகாப்பை கவனிக்க வேண்டும். பறக்கும் படையினர், அதிவிரைவுப்படையினர் அவ்வப்போது டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். கலால் வரித்துறையினர், போலீசார்,மதுவிலக்கு போலீசார் ஆகியோர் இணைந்து டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க உள்ளனர்.

நேற்று காலை முதல் டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள மது வகைகள் சரிபார்க்கப்பட்டது. தேவையுள்ள கடைகளுக்கு மது பானங்கள் குடோனில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன. திருப்பூர் மாநகராட்சி கொரோனா கட்டுப்பாட்டு பகுதி மேலாண்மை குழு சிறப்பு அதிகாரி நிர்மல்ராஜ் நேற்று மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை விளக்கி கூறினார்.

வெள்ளகோவில் அருகே காடையூரான் வலசு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பு மதுப்பிரியர்கள் வெயிலில் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக அங்கு தகரத்தால் பந்தல் போடப்பட்டு இருந்தது. மதுபிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதற்காக கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

Next Story