மத்திய பிரதேசத்தில் சிக்கி தவித்த நவோதயா பள்ளி மாணவர்கள் 17 பேர் காரைக்கால் வந்தனர்


மத்திய பிரதேசத்தில் சிக்கி தவித்த நவோதயா பள்ளி மாணவர்கள் 17 பேர் காரைக்கால் வந்தனர்
x
தினத்தந்தி 7 May 2020 8:45 AM IST (Updated: 7 May 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் சிக்கி தவித்த நவோதயா பள்ளியை சேர்ந்த 17 மாணவ, மாணவிகள் நேற்று அதிகாலை பாதுகாப்பாக காரைக்கால் வந்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியை அடுத்த ராயன்பாளையத்தில் மத்திய அரசின் நவோதயா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் 9 மாணவிகள், 8 மாணவர்கள் என மொத்தம் 17 பேர் மத்திய பிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள நவோதயா பள்ளியில், கல்வி கற்றல் பறிமாற்றம் திட்டத்தின் கீழ் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்றனர்.

கல்வி முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மாணவ, மாணவிகள் 17 பேரும் ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்தனர். இவர்களை மீட்க மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

காரைக்கால் வந்தனர்

அதன்பேரில் வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், முதல்-அமைச்சர் நாராயணசாமி மூலம் மாணவ-மாணவிகளை அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து 17 மாணவ, மாணவிகளும் தனியார் பஸ் மூலம் மத்திய பிரதேசத்தில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் நேற்று அதிகாலை காரைக்கால் நண்டலாறு எல்லைக்கு வந்தனர்.

எல்லையில், மாவட்ட நலவழித்துறை சார்பில், பஸ்சுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு பழங்கள் கொடுத்து வரவேற்றார். பின்னர், நவோதயா பள்ளிக்கு அழைத்துச்செல்லப்பட்ட மாணவ, மாணவிகளை, பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் வரவேற்றனர்.

2 வாரங்கள் தனித்திருக்க அறிவுரை

மாணவ, மாணவிகள் வருகை குறித்து, கலெக்டர் அர்ஜூன் சர்மா கூறுகையில், புதுச்சேரி அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக 17 மாணவ, மாணவிகளும், மிகவும் பத்திரமாக காரைக்கால் வந்துள்ளனர். இது மகிழ்ச்சியானது என்றாலும், அடுத்த இரு வாரத்திற்கு, மாணவர்கள் அனைவரும் வீட்டில் கண்டிப்பாக தனித்திருக்கவேண்டும் என்றார்.


Next Story