சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் சாலை மறியல்


சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 May 2020 10:45 PM GMT (Updated: 8 May 2020 7:53 PM GMT)

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி திருப்பூரில் வட மாநில தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நல்லூர், 

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் வட மாநிலங்களில் இருந்து தொழில் செய்ய திருப்பூர் வந்த தொழிலாளர்கள் பலர் கையில் பணம் இல்லாமலும், உணவு இல்லாமலும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசு மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகள், சமூக சேவகர்களும் உணவு சமைக்க தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு சில மாநிலங்களில் ரெயில் சேவையை தொடங்கியுள்ளது. அதனால் வெளிமாநிலத்தில் இருந்து தங்கி வேலைசெய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆன்லைன் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் உள்ள வடமாநிலத்தவர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொண்டு தங்களின் முழு விவரம், தொலைபேசி எண் மற்றும் ஆதார் கார்டை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுத்து அனுமதி பெற்று ரெயில் சேவை தொடங்கிய பின்னர் பாதுகாப்பாக அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி திருப்பூர் ஊரக போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல போலீஸ் நிலையத்தில் விண்ணப்பித்திருந்தனர். திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையம் அருகே உள்ள ராணி தோட்டம் பகுதியில் பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் இதுவரை ரெயில் சேவையை தொடங்காததால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி நேற்று காலை திருப்பூர்-தாராபுரம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் ஊரக போலீசாருக்கு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி மற்றும் போலீசார் விரைந்தனர். அவர்கள் அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும். ரெயில் சேவை தொடங்கியதும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றனர். இதனால் சமாதானம் அடைந்த வடமாநிலத்தினர் அங்கிருந்து சோகத்துடன் கலைந்துசென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Next Story