ஒகேனக்கல்லில் மசாஜ் தொழிலாளி அடித்துக்கொலை 2 பேரிடம் போலீசார் விசாரணை


ஒகேனக்கல்லில் மசாஜ் தொழிலாளி அடித்துக்கொலை 2 பேரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 May 2020 9:24 AM IST (Updated: 10 May 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல்லில் மசாஜ் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே உள்ள கூத்தப்பாடியை சேர்ந்தவர் துரை (வயது 52). மசாஜ் தொழிலாளி. இவருக்கு 3 மனைவிகள். துரைக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் 3 மனைவிகளும் பிரிந்து சென்று விட்டனர். இதனால் அவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒகேனக்கல்லில் தங்கி மசாஜ் தொழில் செய்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், மசாஜ் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் துரை தனது நண்பர்களுடன் இரவு நேரங்களில் காவிரி கரையோரம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல நேற்று முன்தினம் துரை, தனது நண்பர்களுடன் சூதாடினார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்தனர். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இதனிடையே நேற்று காலை ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் உள்ள ஓம்சக்தி கோவில் அருகில் துரை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

2 பேரிடம் விசாரணை

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா, போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது துரையை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மசாஜ் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் துரையுடன் சூதாடிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story