வெளி மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் மாநகராட்சி ஆணையாளர் தகவல்


வெளி மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 12 May 2020 10:13 AM IST (Updated: 12 May 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

வெளி மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, சேலம் மாநகர பகுதியை வசிப்பிடமாக கொண்டு பணி நிமித்தமாக வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் தங்கி இருந்து விட்டு வருபவர்களை தீவிரமாக கண்காணித்து கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக சிறப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறியதாவது:-

வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறையினரின் சோதனைச்சாவடியில் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தும் பகுதியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 27-ந் தேதி முதல் வெளிமாநிலங்களில் இருந்து 134 பேரும், வெளி மாவட்டங்களில் இருந்து 296 பேரும் என மொத்தம் 430 பேர் சேலத்திற்கு வந்துள்ளனர்.

சமுதாய சமையற்கூடம்

அவர்களில் 345 பேருக்கு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் பகுதியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அங்கு அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என பரிசோதனை செய்த பின்னரே மாநகருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கிடையே மாநகராட்சி சார்பில் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திலேயே சமுதாய சமையற்கூடம் ஏற்படுத்தப்பட்டு 2,250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது வெளி மாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சேலம் நகருக்குள் யாராவது வந்தால் அவர்களது வீடுகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பிரிவினர் கண்காணித்து வருகின்றனர்.

சிறப்பு குழுக்கள்

அந்த நபர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தவிர வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய சமையற்கூடத்தின் செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story