அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு மர்ம நபர் மீது போலீசில் புகார்


அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்கு மர்ம நபர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 16 May 2020 1:50 AM GMT (Updated: 16 May 2020 1:50 AM GMT)

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான கணக்கு தொடங்கிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம். இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.

இவருடைய உதவியாளர் ராஜாராம், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் எந்தவொரு முகநூல், டுவிட்டர் கணக்கும் கிடையாது. ஆனால் சமீபகாலமாக அமைச்சர் சி.வி.சண்முகம் பெயரில் யாரோ மர்ம நபர், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் போலியான கணக்கை தொடங்கி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது. எனவே அந்த போலியான கணக்கை நிரந்தரமாக நீக்குவதோடு, சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

மர்ம நபருக்கு வலைவீச்சு

அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சரின் பெயரில் போலி கணக்கு தொடங்கிய மர்ம நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அமைச்சர் பெயரை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் போலியான கணக்கை மர்ம நபர் தொடங்கி பயன்படுத்தி வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story