கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியதும் தமிழகத்தில் கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தகவல்


கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியதும் தமிழகத்தில் கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 16 May 2020 3:27 AM GMT (Updated: 16 May 2020 3:27 AM GMT)

கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியதும் தமிழகத்தில் கல்லூரிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி ராமாக்காள் ஏரி, அன்னசாகரம் ஏரி ஆகியவற்றில் குடிமராமத்து பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். கோவிந்தசாமி எம்.எல்.ஏ. மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்துகொண்டு குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு அரசு கல்லூரிகளில் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்ட பிறகு கல்லூரிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு அந்த பகுதி முழுமையாக தூய்மைப்படுத்தப்படும். மாணவ-மாணவிகள் அங்கு சென்று கல்வி பயில அச்சம் கொள்ளதேவையில்லை என்ற நிலையை உறுதி செய்வோம். கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிய பின்பு கல்லூரிகளை திறந்து தேர்வுகளை நடத்தவும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை எந்தநேரத்திலும் நடத்த உயர்கல்வித்துறை தயாராக உள்ளது.

சீரமைப்பு பணிகள்

தர்மபுரி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 5 ஏரிகள், 4 அணைக்கட்டுகளில் ரூ.393.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் அனுமதி வழங்கி உள்ளார். 90 சதவீத அரசு பங்களிப்பு மற்றும் 10 சதவீத விவசாயிகள் பங்களிப்புடன் இந்த பணிகள் பாசனதாரர் சங்கம் மூலம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

விழாவில் உதவி கலெக்டர் தேன்மொழி, நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய துணை தலைவர் பொன்னுவேல், ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், உதவிபொறியாளர் மோகனபிரியா, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், கூட்டுறவு சங்க தலைவர்கள் பழனிசாமி, ஆறுமுகம், தாசில்தார் சுகுமார் மற்றும் அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story