ஊட்டியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
ஊட்டியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஊட்டி,
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளதால் ஊட்டி மற்றும் குன்னூர் நகராட்சி மார்க்கெட்டுகளில் உள்ள கடைகள் நெருக்கமாக காணப்படுகிறது. இதனால் சுழற்சி முறையில் சமூக இடைவெளி விட்டு கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.
ஊட்டியில் பல நாட்களுக்கு பின்னர் அனைத்து தனிக்கடைகளும் திறக்கப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். இதனால் வாகனங்கள் வரத்து அதிகரித்து உள்ளது. வழக்கமாக கோடை சீசனான மே மாதம் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
போக்குவரத்து பாதிப்பு
தற்போது சுற்றுலா வாகனங்கள் இல்லை என்றாலும், உள்ளூர் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி கமர்சியல் சாலை, லோயர் பஜார், ஏ.டி.சி., மணிக்கூண்டு, புளுமவுண்டன் சாலை, ஐந்துலாந்தர் பகுதி, கலெக்டர் அலுவலக சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு மக்கள் பொருட்களை வாங்க சென்றனர். இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு வழிப்பாதையில் இருபுறமும் வாகனங்கள் வருவதால், விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. வாகனங்களை சாலையின் நடுவே திருப்பி இயக்கியதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஊட்டியில் மாலை 3 மணி வரை வாகனங்கள் நடமாட்டம் உள்ளது. அப்போது சில வாகனங்கள் சாலையில் வேகமாக செல்கிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதோடு, மக்கள் அச்சத்தில் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, மிதமான வேகத்தில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story