கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் 11 பேர் மீண்டும் பணிக்கு திரும்பினர் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து


கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்கள் 11 பேர் மீண்டும் பணிக்கு திரும்பினர் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து
x
தினத்தந்தி 25 May 2020 12:15 AM GMT (Updated: 24 May 2020 8:02 PM GMT)

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய 11 தீயணைப்பு வீரர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை,

கொரோனா உச்சம் பெற்று வரும் சென்னையில் 25 தீயணைப்பு வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதில் 6 பேர் ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சையிலும், 8 பேர் வீட்டு கண்காணிப்பிலும் இருந்து வருகிறார்கள். அந்தவகையில் 11 தீயணைப்பு வீரர்கள் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப ஆயத்தமானார்கள்.

இதற்காக சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை அலுவலகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை இயக்குனர் டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கலந்துகொண்டார். இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் உள்பட உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு ரோஜாப்பூக்கள் மற்றும் பழக்கூடைகளை வழங்கி சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் கொரோனாவில் இருந்து மீண்ட தீயணைப்பு வீரர்களை மீண்டும் உற்சாகத்துடன் பணியை தொடர வாழ்த்தி அனுப்பினார்.

நிகழ்ச்சியில் இறுதியாக கொரோனா பற்றி விழிப்புணர்வு பாடல் தீயணைப்பு நிலைய பேண்டு குழுவினர் சார்பில் இசைக்கருவிகளும் பாடப்பட்டது. இதையடுத்து பேண்டு குழுவினருக்கு ரொக்கப்பரிசு அளித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.

Next Story