சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்


சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு: சுகாதாரத்துறைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்
x
தினத்தந்தி 29 May 2020 12:00 AM GMT (Updated: 29 May 2020 12:00 AM GMT)

புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே 39 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவரது உறவினர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மூலம் சிறுவன் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆனது.

புதுவை மாநிலத்தில் ஏற்கனவே 6,808 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 37 பேருக்கு மட்டுமே முடிவுகள் வர வேண்டியுள்ளது. வரும் 31-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்வு ஏற்படும் என்று தெரிகிறது. எனவே தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறுகையில், ‘தற்போது மக்கள் ஓரளவு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அவர்களது பங்களிப்பு இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானதாகும்’ என்றார்.

Next Story